நெல்லையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
நெல்லையில் நேற்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து மதியம் வரை வழக்கம்போல் வெயில் கொளுத்தியது. மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மதியம் 2-30 மணிக்கு வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. மாலை 3 மணிக்கு மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்தது.
நெல்லை மாநகர பகுதியில் மாலை 3 மணிக்கு இடி மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ¾ மணி நேரம் நீடித்தது. இதனால் மாநகரில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்ெகடுத்து ஓடியது. சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு மேலப்பாளையம் குலவணிகர்புரம் ரோட்டில் உள்ள ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. இதில் மரக்கிளை அந்த வழியாக சென்ற கார் மீது விழுந்ததில் அது சேதம் அடைந்தது. மேலும் அந்த பகுதியில் 2 மணி நேரம் மின்சாரமும் தடைபட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையில் விரைந்து சென்று, விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினார்கள். இதேபோல் பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதில் சில இடங்களில் வாகனங்கள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினார்கள். இதேபோல் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர், மேலப்பாளையம், முன்னீர்பள்ளம், கருங்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
Related Tags :
Next Story