விவசாயி உடலை வாங்க மறுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை


விவசாயி உடலை வாங்க மறுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 April 2021 2:41 AM IST (Updated: 22 April 2021 2:41 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

குளத்தில் பிணம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா நமையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). விவசாயியான இவர் கடந்த 17-ந் தேதி வயலுக்கு சென்றார். அப்போது உழவு செய்ய டிராக்டர் அழைத்து வருவதாக அவருடைய மனைவி பச்சையம்மாளிடம் கூறிவிட்டு, அங்கிருந்து சென்ற ராஜேந்திரன் மீண்டும் வயலுக்கு திரும்பவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. இது குறித்த புகாரின்பேரில், மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் பிணமாக மிதந்த ராஜேந்திரனின் உடலை மங்களமேடு போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாவில் மர்மம்
இந்நிலையில் நேற்று காலை பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடம் முன்பு கூடியிருந்த ராஜேந்திரனின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், ராஜேந்திரனின் சாவில் மர்ம இருப்பதாக கூறி, அவரின் உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது அவர்கள் கூறுகையில், ராஜேந்திரனுக்கு நீச்சல் தெரியும். அவருக்கு வலிப்பு நோய் கிடையாது. எனவே அவரை யாரேனும் அடித்து கொலை செய்து குளத்தில் வீசியிருக்க வேண்டும். எனவே கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜேந்திரன் காணாமல் போன அன்று வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்த சம்பந்தப்பட்ட மங்களமேடு போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேச்சுவார்த்தை
இன்னும் 10 நாட்களுக்குள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், மங்களமேடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம், என்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த மங்களமேடு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் தலைமையில், மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து, ராஜேந்திரனின் உறவினர்கள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் ராஜேந்திரனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story