கடையம் அருகே சோகம்: தோரணமலை உச்சியில் இருந்து குதித்து தாய்-மகள் தற்கொலை


கடையம் அருகே சோகம்: தோரணமலை உச்சியில் இருந்து குதித்து தாய்-மகள் தற்கொலை
x
தினத்தந்தி 22 April 2021 3:54 AM IST (Updated: 22 April 2021 3:54 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே தோரணமலை உச்சியில் இருந்து குதித்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்டனர்.

கடையம்:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பால்வண்ணநாதபுரத்தை சேர்ந்தவர் தேவபுத்திரன். இவரது மனைவி லட்சுமி தேவி (வயது 30). இவர்களுக்கு மனிஷா (7) என்ற மகள் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமி தேவி தனது மகளுடன் தோரணமலை முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் நேற்று வரை 2 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தேவபுத்திரன் மற்றும் உறவினர்கள் கோவிலுக்கும், உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் இதுகுறித்து கடையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சரசய்யன் மற்றும் போலீசார் தோரணமலைக்கு சென்றனர். அவர்களுடன் லட்சுமிதேவி உறவினர்களும் சென்றனர். மலை உச்சியில் இருந்து போலீசார் பார்த்தனர். அப்போது, அங்கு இளம்பெண், சிறுமியின் உடல்கள் கிடந்தன. இதுகுறித்து உடனடியாக தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் மலையை சுற்றி வந்து 2 உடல்களையும் மீட்டு கீழே கொண்டு வந்தனர். அப்போது தான் இறந்து கிடந்தது லட்சுமிதேவி, மனிஷா என்பது தெரியவந்தது. அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பின்னர் போலீசார், 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், லட்சுமிதேவியின் தந்தை வள்ளியூர் கேசவநேரியைச் சேர்ந்த பூலையா நாடார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார். இதனால் லட்சுமி தேவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவர் வீட்டிற்கு லட்சுமி தேவி வந்தார். அப்போதும், அவர் மனவேதனையாக இருப்பதால் தோரணமலை கோவிலுக்கு சென்றுவருவதாகவும், மனிஷாவை உடன் அழைத்து செல்வதாகவும் வீட்டில் கூறிச் சென்றார்.

பின்னர் கோவில் மலை உச்சியில் இருந்து 2 பேரும் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. எனினும் தற்கொலைக்கு இதுதான் காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தோரணமலை உச்சியில் இருந்து குதித்து தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Next Story