தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள்


தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள்
x
தினத்தந்தி 22 April 2021 4:24 AM IST (Updated: 22 April 2021 4:24 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனியார் நிறுவனங்களில் பணிக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகள் குறித்த ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆய்வு
ஈரோட்டில் இயங்கி வரும் தோழி- தமிழ்நாடு அமைப்பு சார்பில் ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் தொடர்பான ஆய்வு ஒன்று நடந்தது. இதில் பெரும்பாலான பெண்கள் உடல் ரீதியாக பெரிதும் பாதிப்பு அடைந்து வரும் அதிர்ச்சி தகவல் வெளிவந்து இருக்கிறது. இந்த ஆய்வு குறித்து தோழி- தமிழ்நாடு அமைப்பு மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.நல்லையன் பாண்டி கூறியதாவது:-
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் உள்ள சில மாவட்டங்களில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று வரும் பெண் தொழிலாளர்கள் அவர்கள் வேலை செய்யும் பணியிட சூழல் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த கள ஆய்வு ஒன்று தோழி அமைப்பு மூலம் நடத்தப்பட்டது.
5 மாவட்டங்கள்
தோழி- தமிழ்நாடு பெண் தொழிலாளர்  கூட்டமைப்பு மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர், நாமக்கல், சேலம்  மாவட்டங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி 5 மாவட்டங்களில் பின்னலாடை ஆலை, சாய தொழிற்சாலை, ஆயத்த ஆடை, ஜவுளி, கொசுவலை, மற்றும் நெசவு, ஜவ்வரிசி, கோழிப்பண்ணை ஆகிய தொழிற்சாலைகளை மையமாக வைத்து ஆய்வு நடந்தது. 
நாமக்கல் மாவட்டத்தில் 402 தொழிற்சாலைகளில் 2 ஆயிரத்து 753 பெண்கள் வேலை செய்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 438 தொழிற்சாலைகளில் 70 ஆயிரத்து 838 பேர் பணியில் உள்ளனர். கரூரில் 120 தொழிற்சாலைகளில் 5 ஆயிரத்து 253 பேரும், சேலத்தில் 281 தொழிற்சாலைகளில் 18 ஆயிரத்து 410 பேரும் பணியில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 635 தொழிற்சாலைகளில் 31 ஆயிரத்து 649 பெண் தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். இவர்கள் தவிர இன்னும் பல லட்சம் பெண்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாக தினசரி வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பெண்களின் தற்போதைய பணியிட சூழல் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பாக ஒவ்வொரு பிரிவிலும் 100 பேர் என்ற கணக்கில் பெண் தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி ஆய்வுக்கு பின்னர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு ஆஸ்பத்திரிகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழக மருத்துவமனைகள், வருங்கால வைப்புநிதி அலுவலகங்கள் மூலம் தகவல்கள் பெறப்பட்டு அவையும் சரிபார்க்கப்பட்டன. 
உடல் ஆரோக்கியம்
ஆய்வின் முடிவில் பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினை அதிக அளவில் இருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல் வெளியானது.  குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களாக பணியில் ஈடுபடும் பெண்கள் திருமணமான பின் கருத்தரித்தல் பிரச்சினை அதிக அளவில் இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். 100 பேரில் 67 பேர் இந்த பிரச்சினை இருப்பதாக தெரிவித்து உள்ளனர். 17 சதவீதம் பேருக்கு கரு உருவானாலும் தானாக கலைந்து விடும் அபாயம் இருந்திருக்கிறது.
14 சதவீதம் பேர் நீண்டகாலமாக கருத்தரிக்காமலேயே உள்ளனர். 2 சதவீதம் பெண்கள் தங்கள் கருப்பையை அகற்றும் அபாய கட்டத்துக்கு சென்று இருக்கிறார்கள். அதிக நேரம் நின்று கொண்டு அல்லது ஓய்வு இல்லாமல் பணியாற்றும் பெண்கள் சிறுநீரக மண்டல பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் அதிர்ச்சியாக உள்ளது. நீண்ட நேரம் பணி காரணமாக சிறுநீர் கழிக்க செல்ல முடியாமல் இருப்பது, தொழிற்சாலைகளில் சுகாதாரமான கழிவறை வசதிகள் இல்லாததும் இந்த பிரச்சினைக்கு காரணமாக உள்ளது. 33 சதவீதம் பெண்கள் மாதவிடாய் பிரச்சினையில் உள்ளனர். இதுமட்டுமின்றி முதுகு தண்டுவட வலி உள்ளிட்ட பிரச்சினைகளிலும் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு இருக்கிறது.
சட்ட திட்டங்கள்
இதுபோல் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி, வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பல தலைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில், பெண் தொழிலாளர்களுக்கு அரசின் சட்டத்திட்டங்கள் சரியாக பின்பற்றப்படவில்லை என்ற தகவல் தெரியவந்து உள்ளது. எனவே பெண் தொழிலாளர்களை ஆரோக்கியமாகவும், அவர்களை மகிழ்ச்சியானவர்களாகவும் மாற்ற அரசும், அதிகாரிகளும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்த வேண்டும். குறிப்பாக பெண் தொழிலாளர்களின் உடல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்க பணியிடத்தில் ஓய்வு நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்.
தனி அமைச்சகம்
தொழிற்சாலை ஆரோக்கிய வளாகமாக அமைய வேண்டும். இலவச நாப்கின்கள் தொழிற்சாலைகள் மூலம் வழங்கப்பட வேண்டும். கூடுதலாக இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் மாவட்டங்கள் தோறும் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து தொழிற்சாலைகளும் அரசின் வழிகாட்டு முறைகளுடன் செயல்படுகிறதா? என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு மத்திய- மாநில அரசுகள் தனி அமைச்சகம் உருவாக்கி புதிய வரைமுறைகளை கொண்டு வந்தால் ஆரோக்கியமான பெண் தொழிலாளர்களை வைத்து சிறந்த முறையில் தொழில் நிறுவனங்களை நடத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story