கோவா சென்று உல்லாசமாக இருக்க அத்தையிடமே சங்கிலி பறித்த கல்லூரி மாணவர் நண்பர்களுடன் கைதானார்


கோவா சென்று உல்லாசமாக இருக்க அத்தையிடமே சங்கிலி பறித்த கல்லூரி மாணவர் நண்பர்களுடன் கைதானார்
x
தினத்தந்தி 22 April 2021 5:31 AM IST (Updated: 22 April 2021 5:31 AM IST)
t-max-icont-min-icon

கோவா சென்று உல்லாசமாக இருப்பதற்காக சொந்த அத்தையிடமே சங்கிலி பறித்த கல்லூரி மாணவர், தனது நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.

திருவொற்றியூர், 

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் ரத்தினம்மாள் (வயது 48). இவர், திருவொற்றியூர் ெரயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 19-ந் தேதி காலை இவர் வேலைக்கு செல்ல திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலத்தின் கீழ் ெரயில்வே குடியிருப்பு நுழைவு வாயில் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ரத்தினம்மாளை வழிமறித்து மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கல்லூரி மாணவர்

இதுகுறித்து ரத்தினம்மாள் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்தனர்.

பின்னர் சம்பவம் தொடர்பாக ரத்தினம்மாளின் சொந்த தம்பி மாதவனின் மகனான கல்லூரி மாணவர் பாலாஜி (வயது 19) மற்றும் அவருடைய நண்பர்களான திருமூர்த்தி (19), மற்றொரு பாலாஜி (19), ஜெய் கிருஷ்ணா (19) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில் கல்லூரி மாணவர் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் கோவாவுக்கு சென்று உல்லாசமாக இருக்க திட்டமிட்டனர். அதற்கு பணம் தேவைப்பட்டதால் பாலாஜி தனது நண்பர்களுடன் சேர்ந்து சொந்த அத்தை என்றும் பாராமல் ரத்தினம்மாளிடம் சங்கிலி பறித்தது தெரிந்தது. கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story