24 கொரோனா நோயாளிகள் பலி: ஆஸ்பத்திரியில் உறவினர்கள் கதறி அழுது புரண்ட சோகம்
24 கொரோனா நோயாளிகள் பலியான சம்பவத்தில் ஆஸ்பத்திரியில் திரண்ட உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
நாசிக்,
நாசிக் மாநகராட்சி ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் கசிவால் வினியோகம் பாதிப்பு காரணமாக மூச்சுத்திணறி 24 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை அறிந்த உறவினர்கள் கலக்கம் அடைந்து ஆஸ்பத்திரிக்கு ஓட்டம் பிடித்தனர்.
கொரோனா வார்டு என்றும் கூட பார்க்காமல் அவர்களில் சிலர் உள்ளே நுழைந்து விட்டனர். இதனால் டாக்டர்களும், நர்சுகளும் செய்வதறியாமல் திகைத்து போய் நின்றனர்.
42 வயது பிரமோத் வாலுகார் என்பவர் கண்ணீர் விட்டபடியே அழுது புரண்டார். அவர் கூறுகையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் எனது சகோதரரின் உடல் நிலை முன்னேறி வந்தது. இன்று (நேற்று) காலையில் நான் டிபன் எடுத்து வந்தேன். விரைவில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்து இருந்தேன். ஆனால் ஆக்சிஜன் தடை பட்டதை அடுத்து 2 மணி நேரத்தில் எனது சகோதரர் உயிழந்து விட்டார் என்றார்.
இந்த துயரத்தில் லீலா செலார் (வயது 60) என்ற பெண்ணும் உயிரிழந்தார். அவரின் மகள் கவலையுடன், எனது தாய்க்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஆக்சிஜன் பிரச்சினையால் உயிர் போய் விட்டது.
மற்றொருவர், ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது ஆத்திரத்துடன் குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். எனது உறவினரை பறிகொடுத்ததை ஜீரணிக்க முடியவில்லை என்று அவர் கண்ணீர் மல்க கூறினார்.
இன்னொரு பெண், எனது தாய்க்கு 2 நாட்களாக ஆஸ்பத்திரியில் படுக்கை கிடைக்கவில்லை. படுக்கை கிடைத்த பிறகு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்து விட்டார் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
இதேபோல பலர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கண்ணீரும், கம்பலையுமாக நின்றனர். மேலும் பலர் ஆஸ்பத்திரி நிர்வாகம் மீது கடும் கோபமடைந்து, தங்களது வேதனைக்கு பதில் வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் தவறுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story