மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மந்திரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு


மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மந்திரிகளுக்கு எடியூரப்பா உத்தரவு
x
தினத்தந்தி 22 April 2021 11:58 AM IST (Updated: 22 April 2021 11:58 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மந்திரிகளுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வரும் முதல்-மந்திரி எடியூரப்பா, அனைத்து மந்திரிகளும் தங்களின் பொறுப்பு மாவட்டங்களில் தங்கி கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீங்கள்(மந்திரிகள்) உங்களின் மாவட்டங்களில் தங்கி இருந்து கொரோனா பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்பில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கிவிட வேண்டும்.

கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலைமை கைமீறி செல்லாமல் இருக்க தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Next Story