வில்லியனூர் அருகே சுடுகாட்டில் பிணம் கிடந்த சம்பவம்: கல்லூரி மாணவி கொலையில் காதலன் கைது
வில்லியனூர் அருகே கல்லூரி மாணவியை கொலை செய்ததாக காதலன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். வேறு ஒருவரை காதலித்த ஆத்திரத்தில் நயவஞ்சமாக அழைத்து ரவுடி உதவியுடன் திட்டமிட்டு கொலை செய்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
வில்லியனூர்,
வில்லியனூர் அருகே உள்ள சந்தை புதுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ராஜஸ்ரீ (வயது19). சேதராப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியே சென்றவர் இரவு ஆகியும் வீடு திரும்பாத நிலையில் அவரது பெற்றோர் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் பொறையூர்பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் பிணத்தை வீசி இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதில் சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்தது மாணவி ராஜஸ்ரீ என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையை துரிதப்படுத்தியதில் பொறையூர் பேட் பகுதியை சேர்ந்த பிரதீஷ் (19) என்பவர் மாணவியை காதலித்ததும் அவர் தான் ராஜஸ்ரீயை கொலை செய்து பிணத்தை சுடுகாட்டில் வீசி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வீட்டில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மாணவியை கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
பொறையூர்பேட் பகுதியை சேர்ந்த பிரதீஷும் மாணவி ராஜஸ்ரீயும் பள்ளிப் பருவத்தில் சேர்ந்து படித்து வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.
10-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட போதிலும் ராஜஸ்ரீயை கடந்த 4 ஆண்டுகளாக பிரதீஷ் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் அடிபட்டு காலில் காயம் ஏற்பட்டதால் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கினார்.
இந்தநிலையில் பிரதீஷுடன் பேசுவதை ராஜஸ்ரீ தவிர்த்து வந்துள்ளார். செல்போனில் தொடர்பு கொண்டாலும் அதை எடுக்கவில்லை. இதுபற்றி விசாரித்த போது தனது காதலி வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்து பிரதீஷ் விரக்தி அடைந்துள்ளார். எப்படியோ ஒரு வழியாக ராஜஸ்ரீயை தொடர்பு கொண்ட பிரதீஷ், உன்னுடன் கடைசியாக நேரில் பேச வேண்டும் என்று நயவஞ்சகமாக பேசி அழைத்துள்ளார்.
அதை நம்பி ராஜஸ்ரீயும் தனது வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு பிரதீஷை சந்திக்க பொறையூர் பேட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தனது தம்பியுடன் காத்திருந்த பிரதீஷ் காதலியை அழைத்துக் கொண்டு சம்பவம் நடந்த சுடுகாட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு ராஜஸ்ரீயிடம் சமீபகாலமாக தன்னை புறக்கணிப்பதற்கான காரணம் என்ன? இனிமேல் இதுபோல் நடந்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து தருமாறு பிரதீஷ் கேட்டுள்ளார்.
அப்போது கல்லூரியில் நண்பர் ஒருவருடன் பேசி வருவதாக ராஜஸ்ரீ தெரிவித்ததால் அவருடன் பிரதீஷ் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பிரதீஷ், சுடுகாட்டில் கிடந்த பீர் பாட்டிலால் காதலியை தாக்கியுள்ளார். அங்கு கிடந்த தடியை எடுத்தும் சரமாரியாக அடித்து ராஜஸ்ரீயை கொலை செய்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜஸ்ரீயின் உடலை தனது தம்பியின் உதவியுடன் ஒரு பாலித்தீன் சாக்கு மூட்டையில் திணித்து சுடுகாட்டுக்கு இழுத்துச் சென்று போட்டு விட்டு தப்பியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலைக்கு பிரதீஷின் தம்பியும் உடந்தையாக இருந்து இருப்பதால் அவரிடமும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். காலில் அடிபட்டு உள்ள நிலையில் பிரதீஷ் மட்டும் தனியாக ராஜஸ்ரீயின் உடலை சுடுகாட்டுக்கு இழுத்துச் சென்று இருக்க முடியாது. எனவே இந்த கொலையில் ரவுடி உள்பட வேறு சிலருக்கு தொடர்பு இருக்க வேண்டும் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் சிலரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் துப்பு துலங்கினால் இந்த வழக்கில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
மார்பில் பச்சை குத்திய காதலியின் பெயர்
பள்ளிப் பருவத்தில் இருந்தே மாணவி ராஜஸ்ரீயும், பிரதீஷும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். 10-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்ட பிறகும் ராஜஸ்ரீயை கடந்த 4 ஆண்டு களாக பிரதீஷ் காதலித்துள்ளார். கண்மூடித்தனமான தீவிர காதலின் வெளிப்பாடாக ராஜஸ்ரீ என தனது மார்பில் பிரதீஷ் பச்சை குத்தி வைத்துள்ளார்.
இந்தநிலையில் கல்லூரிக்கு சென்ற பிறகு ராஜஸ்ரீயின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்து தான் காதலித்து வந்த பெண்ணையே கொலை செய்யும் அளவுக்கு பிரதீஷ் தள்ளப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story