நீலகிரிக்கு கூடுதலாக 12 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி


நீலகிரிக்கு கூடுதலாக 12 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 22 April 2021 7:42 PM IST (Updated: 22 April 2021 7:51 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரிக்கு கூடுதலாக 12 ஆயிரம் டோஸ் கொரோனா தடுப்பூசி வந்து உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 6 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்பட 43 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை உள்பட சில மையங்களில் தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி செலுத்த வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

தொடர்ந்து கோவையில் இருந்து கூடுதலாக தடுப்பூசி வரவழைக்கப்பட்டு, மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தடுப்பூசி போட பொதுமக்கள் தயக்கம் காட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இதை தொடர்ந்து நீலகிரிக்கு மேலும் தடுப்பூசி வரவழைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்துக்கு 12,000 டோஸ் கோவிஷில்டு தடுப்பூசி கொண்டு வரப்பட்டு உள்ளது. 

தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

ஊட்டியில் அதிக மக்கள் வசிக்கும் காந்தல் மற்றும் குன்னூர், கோத்தகிரியில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 199 தேயிலை தொழிற்சாலைகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தொற்று பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story