மஞ்சூர் அருகே வெளியாட்களுக்கு இடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
மஞ்சூர் அருகே வெளியாட்களுக்கு இடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி,
மஞ்சூர் அருகே எமரால்டு பகுதியில் கடந்த ஆண்டு கனமழை பெய்தது. அப்போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீடுகளை இழந்தவர்கள் தற்போது அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் எமரால்டு சுரேந்திரர் நகர் பகுதிக்கு பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நிலத்தை சமன்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வெளி நபர்களுக்கு இடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொடர்ந்து அங்கு 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குந்தா தாசில்தார் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
வீட்டுமனை பட்டா வழங்க கோரி கோரிக்கை மனு அளித்து வருகிறோம். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நாங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் வசிக்கிறோம். தற்போது வெளி நபர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதை அறிந்து இங்கு வந்தோம் என்றனர்.
அதற்கு அதிகாரிகள் வீடு இல்லாதவர்கள் தங்களுக்கு பட்டா வழங்க கோரி மனு கொடுத்தால் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்படும். தகுதி அடிப்படையில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் சென்றனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story