ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்


ஆதிவாசி மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 22 April 2021 7:42 PM IST (Updated: 22 April 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக ஆதிவாசி மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் என கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் புரமணவயல், கோடமூலா, அள்ளூர் வயல், மார்தோமா நகர், சளிவயல், மில்லிக்குன்னு, தொரப்பள்ளி, கோத்தர்வயல் உள்பட பல இடங்களில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வீடுகள் மிகவும் பழுதடைந்து வசிக்க முடியாத நிலையில் காணப்பட்டது.

 இதனால் நகராட்சி குடிசை மாற்று வாரியம் உள்பட பல துறைகள் மூலம் ஆதிவாசி மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக புதிய வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஆனால் கட்டுமானப்பணி முடிவடையாமல் உள்ளதால் ஆதிவாசி மக்கள் மழைக் காலங்களில் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். 

இதனால் மழைக்காலங்களில் குழந்தைகளுடன் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதை தடுக்க புதிய வீடுகளை விரைவாக கட்டி தரவேண்டும் என ஆதிவாசி மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையொட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் கூடலூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நேற்று அதிகாரிகள் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. ராஜகுமார் தலைமை தாங்கினார். கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். 

அப்போது கோடமூலா உள்பட சில ஆதிவாசி கிராமங்களில் உரிய நிதி வழங்கியும் வீடுகள் கட்டுமான பணி பாதியில் நிற்பதை அதிகாரிகள் எடுத்துரைத்தனர். தொடர்ந்து கூடலூர் பகுதியில் பருவ மழைக்காலம் தொடங்க உள்ளதால் அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் ஆதிவாசி மக்களுக்கு புதிய வீடுகளை விரைவாக கட்டி கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் கூறியதாவது:-
கூடலூர் நகராட்சி பகுதியில் 225 வீடுகள் ஆதிவாசி மக்களுக்கு புதியதாக கட்டப்பட்டு வருகிறது. இதில் சுமார் 100 வீடுகள் கட்டுமான பணி பாதியில் உள்ளது. 

மழைக்காலத்தில் வெள்ளத்தால் ஆதிவாசி மக்கள் பாதிக்காமல் இருக்க வீடுகளை விரைவாக கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் தேன் வயல் ஆதிவாசி மக்களுக்கு ஆம்பரவயல் பகுதியில் 16 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. 

இதனால் மழைக்காலத்தில் ஆதிவாசி மக்கள் எந்தவித அச்சமுமின்றி இருக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story