உழவு பணியில் விவசாயிகள் மும்முரம்
நெகமம் பகுதியில் பெய்த மழையை பயன்படுத்தி நிலத்தை உழவு செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
நெகமம்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக காய்கறி விவசாயம் நடைபெற்று வருகிறது. வாழை, சோளம், நிலக்கடலை உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நெகமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சரிவர மழை பெய்யவில்லை. மாறாக வெயில் வாட்டி வதைத்தது. மேலும் வறட்சி நிலவியது. இதனால் விவசாய பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. மேலும் பயிர்கள் கருகி வந்ததுடன், அதனை பாதுகாக்க விவசாயிகள் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நெகமம் பகுதியில் பரவலாக மழை பெய்தது. மேலும் தொடர்ந்து கோடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேலும் விவசாய பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மழை பெய்து உள்ளதால் விவசாய நிலங்கள் ஈரப்பதமாகி உள்ளன. இதையொட்டி பயிரிடுவதற்காக உழவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து சோளம் மற்றும் நிலக்கடலை பயிரிட விவசாயிகள் தொடங்கி உள்ளனர். இது தவிர வறட்சியால் பசுந்தீவனம் கிடைக்காமல் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வந்தன. தற்போது பெய்து வரும் மழையால், பசுந்தீவனம் வளர தொடங்கி உள்ளது.
இதனால் கால்நடைகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நீங்குவதுடன், கறவை மாடுகளில் பால்வளமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மழை காரணமாக தென்னந்தோப்புகளில் வளர்ந்துள்ள களைகளை நீக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story