மயிலம் அருகே சோகம் தாயுடன் கிணற்றில் குதித்த மாணவி சாவு
மயிலம் அருகே தாயுடன் கிணற்றில் குதித்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலம்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம் மகன் மோகன்(வயது 38). பொக்லைன் எந்திர டிரைவர். இவருக்கு தேவதேவி (31) என்ற மனைவியும், மதுமிதா(10), யோகஸ்ரீ(6) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். மதுமிதா 5-ம் வகுப்பும், யோகஸ்ரீ 2-ம் வகுப்பு படித்து வந்தனர்.
மோகனுக்கும் அவருடைய சகோதரர்கள் 4 பேரின் குடும்பத்தினர்களுக்கும் இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோகன் அதேஊரில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை தேவதேவி தனது இளைய மகளுடன் மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் இங்கு எதற்காக வந்தாய்? என கேட்டுள்ளனர்.
இதனால் மனமுடைந்த தேவதேவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தனது மகளுடன் வயலில் உள்ள விவசாய கிணற்றில் குதித்துவிட்டார்.
தாய் மீட்பு
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து கிணற்றில் இறங்கி தேவதேவியை பத்திரமாக மீட்டனர். தண்ணீரில் மூழ்கிய யோகஸ்ரீயை தேடியும், அவள் கிடைக்கவில்லை. உடனே இதுபற்றி திண்டிவனம் தீயணைப்பு நிலயைத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி யோகஸ்ரீயை பிணமாக மீட்டனர். அப்போது யோகஸ்ரீயின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.
இதையடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டில் இருந்த மதுமிதா தாயுடன் செல்லாததால் உயிர் தப்பினாள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாயுடன் கிணற்றில் குதித்து மாணவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story