கூத்தாண்டவர் கோவிலில் எளியமுறையில் திருநங்கைகள் வழிபாடு
கொரோனா பரவல் காரணமாக கூத்தாண்டவர் கோவிலில் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் கூவாகம் கிராமம் களையிழந்து காணப்பட்டது. அங்குள்ள கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் சிலர், எளிமையான முறையில் வழிபாடு செய்தனர்.
விழுப்புரம்,
நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமெடுத்து வருகிறது. தமிழகத்திலும் இந்நோய் அதிதீவிரமாக பரவி வருவதால் இந்நோய் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு, அனைத்து மாவட்டங்களிலும் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் ஆஞ்சநேயர் கோவில்களில் நடைபெற இருந்த லட்ச தீப திருவிழாவும் மற்றும் பல்வேறு கோவில்களில் நடைபெற இருந்த சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோல் திருநங்கைகள் தங்களின் குலதெய்வமாக கருதி வழிபடும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் கடந்த 14-ந் தேதி தொடங்குவதாக இருந்த சித்திரை பெருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருநங்கைகள் ஏமாற்றம்
ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டும் திருவிழா ரத்து செய்யப்பட்டதால் திருநங்கைகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும் கூத்தாண்டவர் சித்திரை பெருவிழாவை சாஸ்திர சம்பிரதாய முறைப்படி எளிமையாக கொண்டாட திருநங்கைகள் முடிவு செய்தனர். அதன்படி கூத்தாண்டவரை வணங்குவதற்காக சென்னை, சேலம், கிருஷ்ணகிரி பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் 40 பேர் நேற்று அதிகாலை வாகனங்களில் புறப்பட்டு கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலுக்கு வந்தனர்.
கும்மியடித்து வழிபாடு
வழக்கமாக திருவிழா சமயத்தில் திருநங்கைகள், பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வதற்கு முன்பாக ஆடை, அணிகலன்களுடன் தங்களை புதுமணப்பெண்கள் போல் அலங்கரித்துக்கொண்டு வருவார்கள். ஆனால் நேற்றைய தினம் கோவிலுக்கு வந்த திருநங்கைகள், புதுமணப்பெண்களை போன்று அலங்கரித்துக்கொண்டு வராவிட்டாலும் பாரம்பரிய முறையில் விதவிதமான சேலைகளை அணிந்துகொண்டு வந்திருந்தனர். அவர்கள் கூத்தாண்டவர் கோவிலுக்குள் சென்று அங்கு சமூக இடைவெளியை பின்பற்றி கூத்தாண்டவரை வணங்கினர். பின்னர் கோவில் வளாகத்தில் கற்பூரங்களை ஏற்றியதோடு அதனை திருநங்கைகள் சுற்றிவந்தபடி கும்மியடித்தனர். அதன் பிறகு ஒவ்வொரு திருநங்கையும் நூற்றுக்கணக்கில் சூரைத்தேங்காய் உடைத்து வழிபட்டனர்.
களையிழந்த கூவாகம்
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் திருநங்கைகள் எந்தவொரு ஆரவாரமும் இல்லாமல் எளிமையான முறையில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வழிபாடு செய்து விட்டு பின்னர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். ஆண்டுதோறும் கூத்தாண்டர் கோவில் திருவிழாவினால் கூவாகம் கிராமமே களைகட்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டதால் கூவாகம் கிராமம் களையிழந்து காணப்பட்டது.
Related Tags :
Next Story