ஈமுகோழி நிறுவன உரிமையாளர்கள் 30 ந் தேதிக்குள் ஆஜராக வேண்டும் கோவை கோர்ட்டு உத்தரவு
கோவையில் ரூ.3¼ கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ஈமு கோழி பண்ணை உரிமையாளர்கள் 2 பேர் வருகிற 30-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
கோவை
கோவையில் ரூ.3¼ கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள ஈமு கோழி பண்ணை உரிமையாளர்கள் 2 பேர் வருகிற 30-ந் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ரூ.3¼ கோடி மோசடி
கோவை வடவள்ளி அருண் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவருடைய மனைவி நிர்மலா தேவி (37). இவர்கள் அதே பகுதியில் சூர்யா ஈமு பார்ம்ஸ் என்ற பெயரில் ஈமுகோழி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இவர்கள் 193 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 24 லட்சத்து 85 ஆயிரத்து 304 பெற்று உள்ளனர். இதனை திருப்பித் தராமலும், மாத வருமானத்தையும் கொடுக்காமலும் மோசடி செய்துவிட்டு நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவானார்கள்.
விசாரணைக்கு ஆஜராகவில்லை
இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
வழக்கு விசாரணை கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட கோர்ட்டில் (டான்பிட்) நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி நிர்மலா தேவி ஆகியோர் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாமல் நீண்ட காலமாக இருந்து வந்தனர்.
எனவே அவர்கள் மீது கோவை டான்பிட் கோர்ட்டில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவர்கள் ஆஜராகவில்லை.
30-ந் தேதிக்குள் ஆஜராக உத்தரவு
மேலம் அவர்கள் தலைமறைவானார்கள். இதனால் குற்றவியல் முறை சட்டத்தின்படி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி டான்பிட் கோர்ட்டில் வருகிற 30-ந் தேதிக்குள் 2 பேரும் ஆஜராக வேண்டும் என்றும், ஆஜராக தவறினால் அறிவிக்கப்பட்ட குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story