பர்கூர் அருகே கள்ளக்காதலியின் கணவரை காரை ஏற்றிக்கொல்ல முயற்சி-கள்ளக்காதலன் தந்தையுடன் கைது


பர்கூர் அருகே கள்ளக்காதலியின் கணவரை காரை ஏற்றிக்கொல்ல முயற்சி-கள்ளக்காதலன் தந்தையுடன் கைது
x
தினத்தந்தி 22 April 2021 11:23 PM IST (Updated: 22 April 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே கள்ளக்காதலியின் கணவர் மற்றும் நண்பரை காரை ஏற்றிக்கொல்ல முயன்றதாக கள்ளக்காதலனும், இவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.

பர்கூர்:
பர்கூர் அருகே கள்ளக்காதலியின் கணவர் மற்றும் நண்பரை காரை ஏற்றிக்கொல்ல முயன்றதாக கள்ளக்காதலனும், இவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்காதல்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம் அடுத்த போர்மன்னன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 38). இவருடைய மனைவி சித்ரா (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சித்ராவிற்கும் எம்.ஜி.அள்ளி சஞ்சய் நகர் பகுதியை சேர்ந்த வைத்தீஸ்வரன் (22) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 
இதையறிந்த சித்ராவின் கணவர் கிருஷ்ணமூர்த்தி, இவருடைய உறவினரான பூ வியாபாரி மாதேஷ் (40) ஆகியோர் வைத்தீஸ்வரனை கண்டித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 
காரை ஏற்றிக்கொல்ல முயற்சி
நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கிருஷ்ணமூர்த்தி, தனது மோட்டார் சைக்கிளில் மாதேஷ் உடன் கந்திகுப்பம் அருகே உள்ள மருதேப்பள்ளிக்கு சொந்த வேலையாக சென்று கொண்டு இருந்தார். அப்போது கொல்லப்பட்டி கருங்கல் மேடு என்ற இடத்தில் வைத்தீஸ்வரன் வேகமாக காரை ஓட்டி வந்து கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது கொலை செய்யும் நோக்கில் பின்னால் மோதி உள்ளார். 
இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து கொண்டிருந்த மாதேஷ் கீழே விழுந்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி மட்டும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழாமல் தப்பிச்சென்று விட்டார்.
அப்போது அங்கு வந்த வைத்தீஸ்வரனின் தந்தை வெங்கடேஷ் (50), தாயார் ஈஸ்வரி (42), அண்ணன் வெற்றிவேல் (25) ஆகியோர் மாதேஷை கையாலும், கல்லாலும், இரும்பு கம்பியாலும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மாதேஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
கைது
இது குறித்து மாதேஷ் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து வைத்தீஸ்வரன் மற்றும் அவரது தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள வைத்தீஸ்வரனின் தாயார் ஈஸ்வரி, அண்ணன் வெற்றிவேல் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story