புறவழிச்சாலை அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு
அன்னூர் அருகே புறவழிச்சாலை அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கற்கள் போடும் பணியை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னூர்
அன்னூர் அருகே புறவழிச்சாலை அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கற்கள் போடும் பணியை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புறவழிச்சாலை
கோவையில் இருந்து சத்தி செல்லும் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவை அருகே உள்ள கோவில்பாளையம் கோட்டை பாளையத்தில் இருந்து குப்பைபாளையம், அச்சம்பாளையம் வழியாக அன்னூர்-சிறுமுகை 4 ரோட்டில் 19 கி.மீ. தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த சாலை விவசாய விளைநிலங்கள் வழியாக செல்லதாக கூறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு எல்லை கற்கள் போட்டதை விவசாயிகள் பிடுங்கி எறிந்தனர். இதனால் எல்லை கற்கள் போடும் பணி நிறுத்தப்பட்டது.
பணியை தடுத்து நிறுத்தினர்
இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத்துறையினர் கணுவக்கரை, ஆம்போதி, பசூர், அச்சம்பாளையம் பகுதியில் புறவழிச்சாலைக்காக எல்லை கற்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். விவசாய நிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கற்கள் நடும் பணியை தடுத்து நிறுத்தினார்கள்.
அத்துடன் அங்கு இருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தாசில்தாரிடம் மனு
மேலும் புறவழிச்சாலை அமைப்பதால் விவசாய நிலங்கள், கிணறுகள், குடியிருப்புகள் பாதிக்கப்படுவதால், இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சிறப்பு தாசில்தார் துரைசாமியிடம் மனு அளித்தனர்.
இதையடுத்து அங்கு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. மேலும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்திய பின்னர் பணியை தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story