மேலாளர்-ஊழியர் உள்பட 6 பேருக்கு கொரோனா: ஆப்பக்கூடல், கொடுமுடி வங்கியில் கிருமி நாசினி தெளிப்பு
மேலாளர் மற்றும் ஊழியர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் ஆப்பக்கூடல் மற்றும் கொடுமுடி வங்கியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
ஈரோடு
ஆப்பக்கூடல் மற்றும் கொடுமுடியில் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
கொரோனா
அந்தியூரை அடுத்த ஆப்பக்கூடலில் கனரா வங்கி உள்ளது. அந்த வங்கியின் மேலாளராக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவர் பணியாற்றி வருகிறார். இவர் பவானி வர்ணபுரத்தில் தங்கி இருந்து தினமும் வங்கிக்கு சென்று வருகிறார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நிலை சரியில்லை. இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டது.
2 நாட்கள் விடுமுறை
இதையடுத்து அவர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த வங்கியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வங்கிக்கு தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை விடப்பட்டது.
கொடுமுடி
கொடுமுடியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் ஈரோட்டை சேர்ந்த ஒருவர் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அந்த வங்கிக்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மேலும் கொடுமுடி வடக்கு மூர்த்தியாபாளையத்தை சேர்ந்த 4 வயது சிறுவன், சாலைப்புதூரை சேர்ந்த 15 வயது சிறுமி, கல்வெட்டுபாளையத்தை சேர்ந்த 34 வயது ஆண் மற்றும் கொடுமுடியை சேர்ந்த 55 வயது பெண் ஆகிய 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story