பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு நிரம்பியது
திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனை கொரோனா வார்டு நிரம்பியது.
திருச்சி,
திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனை கொரோனா வார்டு நிரம்பியது. இதனால் சிறப்பு முகாமில் பாதிக்கப்பட்ட 13 பேர் தனிமை முகாமுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
கொரோனா வார்டு நிரம்பியது
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 450 படுக்கைகள் உள்ளன. இந்த 450 படுக்கைகளிலும் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதால் புதிதாக தொற்று ஏற்பட்டவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க முடியவில்லை.
சிறப்பு முகாமில் தொற்று
இந்நிலையில் நேற்று திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாம் சிறையில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களை வேனில் ஏற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு வந்தனர்.
ஆனால் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லாததால் அவர்கள் நேற்று இரவு திருச்சி காஜாமலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமைப்படுத்தப்பட்ட முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நெருக்கடி ஏற்பட்டால் என்ன செய்வது என்பது பற்றி அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ஆம்புலன்ஸ் கணக்கெடுப்பு
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள மொத்த ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை எவ்வளவு? தனியாரிடம் எத்தனை உள்ளன அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் எத்தனை ஆம்புலன்ஸ்கள் உள்ளன? என்ற புள்ளிவிவர கணக்கையும் சேகரித்து வருகிறது. இதில் அரசு தரப்பில் 10 ஆம்புலன்ஸ்களும் தனியார் மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ்களும் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு இன்னும் அதிகமாகி நெருக்கடி ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கூடுதலாக 10 ஆம்புலன்ஸ்களை வெளி மாவட்டத்தில் இருந்து கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story