வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை
வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் வேட்பாளர்களின் முகவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சமீரன் கூறினார்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வாக்கு எண்ணிக்கை மையம் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, தேர்தல் தாசில்தார் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேட்பாளர்கள் முகம்மது அபுபக்கர் எம்.எல்.ஏ., பூங்கோதை எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமார், ராஜா மற்றும் வேட்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:-
தென்காசி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க போதுமான பரப்பளவை கொண்டுள்ளது. இதனால் ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களில் பின்பற்றியது போல 14 மேஜைகளை கொண்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கைக்கு தங்களால் நியமனம் செய்யப்படும் முகவர்கள் பட்டியலை இன்று (வெள்ளிக்கிழமை) ஒப்படைக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக 10 சதவீதம் கூடுதல் முகவர்கள் பட்டியலையும் தனியே ஒப்படைக்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து வேட்பாளர்களின் முகவர்களும் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அனைத்து முகவர்களும் தவறாமல் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story