ஓமலூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை: 3 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்
ஓமலூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் 3 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் அடைந்தன.
ஓமலூர்,
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் சக்கரை செட்டிப்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி, கூகுட்டப்பட்டி, டேனிஷ்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் பலத்த காற்றின் காரணமாக சக்கரை செட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணி என்பவரின் தோட்டத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 1500-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து முற்றிலும் சேதம் அடைந்தன.
3 ஆயிரம் வாழை மரங்கள்
இதேபோல் தொப்பளாங்காடு பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவருடைய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமானது. மேலும் தும்பிபாடி, டேனிஸ்பேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சாய்ந்தன. நேற்று மாலை மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொட்டியபுரம் ஊராட்சி கட்டிகாரனூர் பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பலத்த காற்று, மழைக்கு பொட்டியபுரத்தில் இருந்து தும்பிபாடி செல்லும் சாலையில் அண்ணா நகர் அருகே மின் கம்பி மீது மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் மரம் ரோட்டில் சாய்ந்ததால் ஓமலூரில் இருந்து தும்பிபாடி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின் தடை
இதனிடையே பல்வேறு கிராமங்களிலும் பலத்த மழை காரணமாக நேற்று மாலை மின் தடை ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் சிரமம் அடைந்தனர்.
Related Tags :
Next Story