குப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகையை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்


குப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகையை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்
x
தினத்தந்தி 23 April 2021 4:19 AM GMT (Updated: 23 April 2021 4:19 AM GMT)

குப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகையை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளரை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

பெரம்பூர், 

சென்னை ராயபுரம், ஆட்டுத்தொட்டி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 55). இவர், சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று காலை இவர், கொருக்குப்பேட்டை ஏகப்பன் தெரு பகுதியில் உள்ள குப்பைத்தொட்டியில் இருந்த குப்பைகளை தரம் பிரித்து கொண்டு இருந்தார்.

அப்போது குப்பையில் கிடந்த பை ஒன்றை திறந்து பார்த்தபோது அதில் தங்க நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த நகையை நேர்மையுடன் கொருக்குப்பேட்டை போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி விசாரணை நடத்தி வந்தார்.

இதற்கிடையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த முனியம்மாள் என்பவருடைய மகள் தேவி, வீட்டில் இருந்த 10 பவுன் நகை மாயமானதாக கொருக்குப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், தேவிக்கு நேற்று வடபழனியில் திருமணம் நடைபெற்றது. முன்னதாக திருமணத்துக்கு செல்ல வீட்டில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். தேவியின் திருமணத்துக்கு வாங்கிய 10 பவுன் நகையை எடுத்து பையில் வைக்கும்போது தவறுதலாக குப்பை கொட்டும் பையில் வைத்து விட்டதாக தெரிகிறது. இதனால் குப்பைகளோடு குப்பையாக அந்த 10 பவுன் நகை குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்டது.

இது தெரியாமல் வீட்டில் இருந்த நகையை காணாமல் வீடு முழுவதும் தேடி பார்த்துவிட்டு எங்கும் கிடைக்காததால் கடைசியாக போலீசில் புகார் கொடுக்க வந்தது தெரிந்தது.

இதையடுத்து குப்பைத்தொட்டியில் கிடந்ததாக தூய்மை பணியாளர் மோகனசுந்தரம் கண்டெடுத்து கொடுத்த நகை தேவிக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து அந்த நகையை மணப்பெண் தேவியிடம் இன்ஸ்பெக்டர் தவமணி, ஒப்படைத்தார். நகையை பெற்றுக்கொண்ட அவர் மற்றும் அவரது உறவினர்கள் மாநகராட்சி தூய்மைப்பணியாளர் மோகனசுந்தரம் மற்றும் இன்ஸ்பெக்டருக்கு நன்றி தெரிவித்தனர்.

நகையை நேர்மையுடன் போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளர் மோகன சுந்தரத்தை போலீசார் வெகுவாக பாராட்டினர்.

Next Story