தூத்துக்குடி அரசு பாலிடெக்னி கல்லூரியில் கொரோனா பரிசோதனை மையம் திறப்பு
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா பாதிப்பு தன்மை குறித்து அறிய தனி பரிசோதனை மையம் திறக்கப்பட்டு உள்ளது.
கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கொரோனா தீவிர தொற்று உள்ளவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். லேசான தொற்று உள்ளவர்கள் மற்றும் இணை நோய்கள் இல்லாதவர்கள் கொரோனா பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதேபோல் எந்தவித அறிகுறியும் இல்லாதவர்கள், அவர்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பரிசோதனை மையம்
இதில் கொரோனா நோயாளிகளுக்கு பாதிப்பின் தன்மை குறித்து அறிந்து யார், யாருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை?, யார், யாரையெல்லாம் கொரோனா பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கலாம், யாரை வீடுகளில் இருக்க அனுமதிக்கலாம் என்பதை கண்டறிவதற்காக தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனியாக பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரவலை தடுக்க முடியும்
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் கூறியதாவது:- கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் அனைவரும் இந்த மையத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். அவர்களுக்கு அரசு மருத்துவமனை மருத்துவ குழு மூலம் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு, எக்ஸ்ரே பரிசோதனை போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். இதற்கான அனைத்து கருவிகள், நடமாடும் எக்ஸ்ரே வாகனம் போன்ற வசதி இந்த மையத்தில் செய்யப்பட்டு உள்ளது. மேலும், தேவையான மருத்துவ பணியாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதனை தவிர முழு கவச உடை அணிந்த டிரைவருடன் கூடிய ஒரு வேனும் இந்த மையத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படும். கொரோனா நோயாளிகள் வீடுகளில் இருந்து இந்த வேன் மூலம் பரிசோதனை மையத்துக்கு அழைத்து வரப்படுவார்கள். வீட்டில் தனிமைப்படுத்த சான்றிதழ் அளிக்கப்படும் நபர்கள் இதே வேன் மூலம் வீட்டில் கொண்டு விடப்படுவார்கள். இதன் மூலம் கொரோனா தொற்று மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story