வைகை அணையில் குளித்தபோது புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலி


வைகை அணையில் குளித்தபோது  புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலி
x
தினத்தந்தி 23 April 2021 6:49 PM IST (Updated: 23 April 2021 6:49 PM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் குளித்தபோது புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மணியாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). இவருக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆகிறது.  இவர் கேரளாவில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தார். 
இதே கிராமத்தை சேர்ந்தவர் ஞானராஜ் (45).எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். ராஜ்குமார், ஞானராஜ் இருவரும் நேற்று முன்தினம் மாலை  வைகை அணையில் குளிக்க சென்றனர். அங்கு அவர்கள் வைகை அணை பகுதியில் உள்ள பழைய பாலம் அருகே  குளித்து கொண்டிருந்தனர். 

தண்ணீரில் மூழ்கினர்
அப்போது நீச்சல் தெரியாத அவர்கள் இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் வைகை அணை போலீசாருக்கும், ஆண்டிப்பட்டி தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய இருவரையும் தேடினார்கள். இரவு வரை தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை தீயணைப்பு படையினர் மீண்டும் தேடுதல் பணியை தொடங்கினார்கள். இதையடுத்து சுமார் 2 மணி நேரம் தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு படையினர், அவர்கள் இருவரின் உடல்களையும் பிணமாக மீட்டனர். 
பின்னர் இருவரின் உடல்களும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
ஒரே கிராமத்தை சேர்ந்த 2 பேர் வைகை அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story