ஆரணியில் வாடகை செலுத்தாத கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


ஆரணியில்  வாடகை செலுத்தாத கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
x
தினத்தந்தி 23 April 2021 6:58 PM IST (Updated: 23 April 2021 6:58 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் வாடகை செலுத்தாத கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் நகராட்சி ஆணையாளர் ஜீப்பை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி

ஆரணியில்  வாடகை செலுத்தாத கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து வியாபாரிகள் நகராட்சி ஆணையாளர் ஜீப்பை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

கடைக்கு ‘சீல்’ 

ஆரணி நகராட்சியில் ஒரு மாதம் முடிந்து 23 நாட்கள் ஆகியும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுத்தது. அதன்படி  எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள கடைக்குச் சென்று, அந்தக்  கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களை வெளியில் அனுப்பி விட்டு, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் கடையை பூட்டி ‘சீல்’ வைத்தனர். 

சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் விரைந்து வந்து, ஏன் எனது கடைக்கு மட்டும் ‘சீல்’  வைக்கிறீர்கள்? ஆரணியில் நான் ஒருவர் மட்டும் தான் கடைக்கு வாடகை தராமல் பாக்கி வைத்துள்ேளனா? எனக் கேள்வி எழுப்பினார். 
உடனே ஆணையாளர் மற்றும் நகராட்சி வருவாய் அலுவலர், அலுவலக மேலாளர் ஆகிய அனைவரும் அங்கிருந்து வெளியேறினர். அங்கு, நிறுத்தப்பட்டிருந்த நகராட்சி ஜீப்பில் ஏறி அவர்கள் புறப்பட இருந்தனர்.

ஜீப் முன்பு நின்றனர்

இதையறிந்ததும் அந்த வியாபாரி மற்றும் இதர நகராட்சி கடை வியாபாரிகள் பலர் திரண்டு வந்து நகராட்சி ஆணையாளரின் ஜீப் முன்பு வந்து நின்று அவரை சூழ்ந்து முற்றுகையிட்டு தற்போது வருவாய் இல்லாத நிலையிலும் நகராட்சிக்கு வாடகை முறையாக செலுத்தப்பட்டு வருகிறது.
உயர்த்தப்பட்ட வாடகையை தாங்கள் குறைக்க முடியவில்லை, ஏன் இதுபோல முன் அறிவிப்பு இன்றி வந்து வியாபாரிகளை அசிங்க படுத்துகிறீர்கள்? எனக் கேட்டு ஆவேசமடைந்தனர். 

அதற்கு ஆணையாளர், அவரது கடையில் பிளாஸ்டிக் அதிகளவில் பயன்படுத்துவதாகவும், மேலும் முக கவசம் அணியாமல் இருப்பதாகவும், அதனால் தான் ‘சீல்’  வைத்தேன் என்றும் கூறினார். 

அதற்கு வியாபாரிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஆரணி நகரில் பிளாஸ்டிக் ஒழிக்கப்படவில்லை, ஆய்வு மேற்கொள்ள ஆணையாளர் வருவதற்கு முன்பே உடன் வரும் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு போன் செய்து தகவல் தெரிவிப்பதால் பிளாஸ்டிக்கை மறைத்து விடுகிறார்கள், 

அனைத்தும் செய்வது உங்கள் ஊழியர்கள் தான் எனக் கூறினார்கள். 

இதையடுத்து வியாபாரிகள், முதலில் ஜீப்புக்கு வழிவிடுங்கள், பின்னர் அலுவலகத்துக்குச் சென்று பேசலாம் எனக் கூறி ஒருவரை ஒருவர் சமாதானம் செய்து கொண்டு ஆணையாளரை அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

வியாபாரிகள் நீதிமன்றம் சென்றுள்ளனர்

ஆரணி நகராட்சியில் 500 கடைகள் இருப்பதாக தகவல்களை அதிகாரிகள் தந்து வருகின்றனர். தற்போது ஆரணி காய்கறி மார்க்கெட் 150 கடைகளும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பழ வியாபாரி வளாகம் வாடகை பாக்கியால் சுமார் 20 மாதங்களுக்கு முன்பே பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க வலியுறுத்தி பல வியாபாரிகள் நீதிமன்றம் சென்றுள்ளனர். 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகளை காலி செய்து விட்ட நிலையில் உள்ளது. இதுவரை வாடகையும் செலுத்தப்படவில்லை என்பது உண்மைதான். 

ஆனால் பூட்டிய கடைகளுக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் 500 கடைகள் இருப்பதாக கூறி ஒட்டுமொத்தமாக வியாபாரிகள் மீது குறை கூறி வருகிறார்கள். 

இவ்வாறு அவர்கள் கூறினர். 

இதனால் ஆரணி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-----------------

Next Story