கொரோனா நோய்பரவல் எச்சரிக்கை அவசியம்


கொரோனா நோய்பரவல் எச்சரிக்கை அவசியம்
x
தினத்தந்தி 23 April 2021 7:23 PM IST (Updated: 23 April 2021 7:23 PM IST)
t-max-icont-min-icon

கிராமங்களில் கொரோனா நோய்பரவல் எச்சரிக்கை அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

போடிப்பட்டி
கிராமங்களில் கொரோனா நோய்பரவல் எச்சரிக்கை அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
முககவசம்
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடங்கி ஒரு ஆண்டு கடந்த நிலையில் தற்போது மீண்டும் வீரியத்துடன் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தினசரி பாதிப்பு அதிகரிப்பதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க முக்கிய ஆயுதங்களாக முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் போன்ற நடைமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முககவசம் அணியாமல் பொதுவெளியில் சுற்றுபவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களிலும் கெத்து காட்டுகிறோம் என்ற பெயரில் முககவசம் இல்லாமல் சுற்றி ஆபத்தை விலைக்கு வாங்குவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
கொரோனா என்னும் கொடிய நோய் குறித்து பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் ஒருசில பகுதிகளில் கொரோனா என்று ஒரு நோயே இல்லை. இது ஒருவகை அரசியல் என்பது போன்ற வீண் பேச்சுக்களை ஒருசிலர் பேசித் திரிகின்றனர். இத்தகைய ஆபத்தான போக்கு கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தக் கூடும்.
அபராதம்
மேலும் கிராமப்புறங்களில் முககவசம் அணிவதில் அலட்சியப்போக்கு தற்போதும் தொடர்கிறது. அதிகாரிகள் மற்றும் போலீசார் பல இடங்களில் அபராதம் வசூலிப்பதால் பெயரளவுக்கு தாடையில் முககவசத்தை அணிந்து கொண்டு அதிகாரிகளைப் பார்த்ததும் சரியாக அணிகின்றனர். மேலும் இளைஞர்கள் முககவசம் அணியாமல் ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் பயணம் செய்வது, போலீசில் சிக்காமல் தப்புவது போன்றவையே கெத்து மற்றவர்களெல்லாம் வெத்து என்பது போன்ற மாயையில் சிக்கியுள்ளனர். இதனால் நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
எனவே கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story