உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
உடுமலை பகுதியில் உள்ள உரக்கடைகள் மற்றும் கிடங்குகளில் ஆய்வு செய்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
போடிப்பட்டி
உடுமலை பகுதியில் உள்ள உரக்கடைகள் மற்றும் கிடங்குகளில் ஆய்வு செய்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
உரம் விலை உயர்வு
சமீபத்தில் உரங்களின் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உடுமலை பகுதி உரக்கடைகளில் பழைய விலையிலான உரங்கள் அதிக அளவில் இருப்பு உள்ளது. விலை உயர்வை சாதகமாகப் பயன்படுத்தி பழைய உரங்களை புதிய விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் விவசாயிகள் ரசீது இல்லாமல் உரங்களை வாங்கக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் உடுமலை வட்டார வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் தேவி உடுமலை பகுதியிலுள்ள உரக்கடைகள் மற்றும் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ள சேமிப்புக்கிடங்குகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது
‘விவசாயிகள் ஆதார் அட்டை, சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கொண்டு சென்று, ரசீது பெற்று உரங்களை வாங்க வேண்டும். விற்பனையாளர்கள் இந்த ஆவணங்கள் இல்லாதவர்களிடம் முறைகேடாக உரங்களை விற்பனை செய்யக்கூடாது. அந்தவகையில் ஒரே நபருக்கு அதிக அளவில் முறைகேடாக உரம் விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.
உரக்கட்டுப்பாட்டு ஆணை
மேலும் மொத்த விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரம் விற்பனை செய்யவும், உரம் மாற்றம் செய்யவும் கூடாது. அதுபோல வெளிமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவும் கூடாது. சில்லறை விற்பனையாளர்களுக்கு உரங்களை அனுப்பும்போது உரிய ஆவணங்களை வாகனங்களில் கொடுத்து அனுப்ப வேண்டும்.
மேலும் உர விற்பனையாளர்கள் உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரங்களை இருப்பு வைப்பதும், அனுமதி பெறாத நிறுவன உரங்களை கொள்முதல் செய்வதும் கூடாது. விவசாயிகள் அல்லாதவர்களுக்கு முறைகேடாக உரம் விற்பனை செய்வது குற்றமாகும். தற்போது உரங்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் பழைய விலையிலுள்ள உரங்களை புதிய விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் செயற்கையாக உரம் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவது, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, விலைப்பட்டியல் வைக்காமல் விற்பனை செய்வது, இருப்பு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பராமரிக்காமலிருப்பது, விவசாயிகளுக்கு ரசீது கொடுக்க மறுப்பது போன்ற செயல்களில் விற்பனையாளர்கள் ஈடுபட்டால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985 ன் படி உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.'
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story