நகை அடகு கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி


நகை அடகு கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 23 April 2021 8:20 PM IST (Updated: 23 April 2021 8:20 PM IST)
t-max-icont-min-icon

நகை அடகு கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நிலக்கோட்டை:
நகை அடகு கடை உரிமையாளரிடம் நூதன முறையில் ரூ.1½ லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 
அடகு கடை உரிமையாளர்
மதுரை மாவட்டம் விரகனூர் மகாராஜன் நகரை சேர்ந்தவர் திரவியம் (வயது 53). இவர் மதுரையில் நகை அடகு கடை வைத்துள்ளார். மேலும் வங்கிகளில் அடகு வைத்திருக்கும் நகைகளை கமிஷன் அடிப்படையில் மீட்டு பணம் பெறும் தொழிலும் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து, மதுரை பழங்காநத்தத்தை சேர்ந்த வினோத் (23) என்பவர் திரவியத்திற்கு செல்போனில் ெதாடர்பு கொண்டார். அப்போது தனது 10 பவுன் நகையை நிலக்கோட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.1½ லட்சத்திற்கு அடகு வைத்திருப்பதாகவும், அதை கமிஷன் அடிப்படையில் மீட்டு தருமாறும் கேட்டுள்ளார். 
இதை நம்பிய திரவியம் கடந்த மாதம் 23-ந்தேதி நிலக்கோட்டைக்கு வந்தார். அங்கு ஏற்கனவே நின்றிருந்த வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும், திரவியத்தை வங்கிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் ரூ.1½ லட்சத்தை வாங்கிய வினோத், தனது நண்பர் ஒருவருடன் வங்கிக்குள் சென்றார். வங்கிக்கு வெளியே திரவியமும், வினோத்தின் நண்பர்கள் 2 பேரும் இருந்தனர். இதற்கிடையே வங்கிக்குள் சென்ற வினோத் உள்பட 2 பேரும் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. மேலும் திரவியத்துடன் நின்றிருந்த மேலும் 2 பேர் நைசாக அங்கிருந்து தப்பிவிட்டனர். இதனால் மோசடி செய்யப்பட்டதை அறிந்த திரவியம், இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
4 பேர் கைது
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணா காந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்தவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் பண மோசடியில் ஈடுபட்ட வினோத் மற்றும் அவரது நண்பர்கள் மதுரை மாடக்குளத்தை சேர்ந்த அஜீத்குமார் (24), தெற்குவாசல் பகுதியை சேர்ந்த நாகராஜன் (32), பழங்காநத்தத்தை சேர்ந்த பாலகுமார் (55) ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். 

Next Story