கேரட் கொள்முதல் விலை வீழ்ச்சி


கேரட் கொள்முதல் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 23 April 2021 8:32 PM IST (Updated: 23 April 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் கேரட் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் சில விவசாயிகள் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி போன்ற இங்கிலீஷ் காய்கறிகளை பயிரிடுகின்றனர்.

இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெடுகுளா, காவிலோரை, பட்டக்கொரை, பில்லிகம்பை, கதவுதொரை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் ஏராளமான பரப்பளவில் கேரட் பயிரிட்டு உள்ளனர்.

டந்த சில மாதங்களுக்கு முன்பு கோத்தகிரி பகுதியில் போதுமான மழை பெய்தது. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வருகின்றன.

இதற்கிடையில் இந்த மாத முதல் வாரத்தில் கிலோவுக்கு ரூ.40 என்ற விலையில் கேரட் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதனால் கேரட் பயிரிட்டு இருந்த விவசாயிகள் தங்களது தோட்டங்களில் கேரட்டுகளை அறுவடை செய்து, விற்பனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் முதல் தர கேரட் கிலோவுக்கு ரூ.14 முதல் ரூ.20 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் 2-ம் தர கேரட் கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.7 வரை மட்டுமே விற்பனையாகிறது. 

கேரட் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், அதை பயிரிட்ட விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர்.

இதுகுறித்து கதவுதொரை கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- ஒரு ஏக்கர் நிலத்தில் கேரட் பயிரிட சுமார் 1½ கிலோ விதை தேவைப்படுகிறது. சாதாரண கேரட் விதைகள் கிலோவுக்கு ரூ.35 ஆயிரம், ஹைபிரீட் விதைகள் கிலோவுக்கு ரூ.50 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. 

நந்தினி, ரொமான்ஸ், போர்ட் எப் போன், ஜிவேரா, அலமாடா உள்ளிட்ட பல்வேறு ரக விதைகள் உள்ளன. அதில் ரொமான்ஸ் மற்றும் அலாமாடா ரக விதைகளை ஏராளமான விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். 

ஒரு ஏக்கரில் கேரட் பயிரிட்டு அறுவடை செய்ய தொழிலாளர் சம்பளம், விதை, உரம், மருந்து உள்ளிட்ட செலவுகளுக்கு சுமார் ரூ.1½ லட்சம் செலவாகிறது. 

அறுவடை செய்தால் 60 மூட்டைகள் முதல் 80 முட்டைகள் கேரட் கிடைக்கும். நல்ல உயர்தர விதையை பயன்படுத்தினால் 100 மூட்டைகள் முதல் 150 மூட்டைகள் வரை கிடைக்கும். ஒரு கிலோ கேரட் பயிரிட ரூபாய் 10 வரை செலவாகிறது. 

தற்போது கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால், சமவெளி பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் கேரட்டுகளை கொண்டு சென்று விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படும். எனவே உள்ளூர் மார்க்கெட்டுகளிலேயே விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story