நிலக்கோட்டையில் இ-சேவை மைய ஊழியர் பணி நீக்கம்
நிலக்கோட்டையில் ஆதார் கார்டு எடுக்க கூடுதல் கட்டணம் வசூலித்த இ-சேவை மைய தற்காலிக ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்காலிக ஊழியராக யுவராஜா என்பவர் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நிலக்கோட்டை புதுத்தெருவை சேர்ந்த தேன்மொழி (வயது 25) என்பவர் தனது 2 வயது குழந்தைக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையத்திற்கு சென்றார்.
அப்போது ஆதார் கார்டு எடுக்க தேன்மொழியிடம், யுவராஜா கூடுதல் கட்டணமாக ரூ.200 வசூல் செய்துள்ளார். இதனை தேன்மொழி தட்டிக்கேட்டார். ஆனால் அதற்கு இ-சேவை மையத்தில் இருந்த பணியாளர்கள் உரிய பதில் அளிக்கவில்லை.
இதனால் கூடுதல் கட்டணம் வசூலித்தது குறித்து திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் தேன்மொழி புகார் மனு கொடுத்தார். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர், இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு தாசில்தார் யூஜினுக்கு உத்தரவிட்டார். அதன்படி, தாசில்தார் யூஜின் விசாரணை நடத்தினார்.
அப்போது தேன்மொழி கொடுத்த புகார் உண்மை என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தற்காலிக ஊழியர் யுவராஜை பணிநீக்கம் செய்து தாசில்தார் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story