மகளுடன் உண்ணாவிரதம் இருந்த தே.மு.தி.க. பிரமுகர் கைது
கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி நகராட்சி அலுவலகம் முன்பு மகளுடன் உண்ணாவிரதம் இருந்த தேமுதிக பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல்:
கடையடைப்பு போராட்டம்
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.
இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து கொடைக்கானலுக்கு கடந்த 20-ந்தேதி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலா தொழிலை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி வியாபாரிகள் கடை அடைத்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து நேற்று முன்தினம் கடையடைப்பு மற்றும் கஞ்சித்தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில், அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
தே.மு.தி.க. பிரமுகர் உண்ணாவிரதம்
இந்த நிலையில் நேற்று காலை கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்துக்கு பேத்துபாறை கிராமத்தை சேர்ந்த தே.மு.தி.க. பிரமுகர் மகேந்திரன், தனது 15 வயது மகளுடன் வந்தார்.
பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்து மகேந்திரனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கைது
அப்போது கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. பிரமுகரையும், அவருடைய மகளையும் போலீசார் கைது செய்தனர்.
பின்பு அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் மாலையில் அவர்களை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story