வடகீரனூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்


வடகீரனூரில்  குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 April 2021 9:36 PM IST (Updated: 23 April 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

வடகீரனூரில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் நடத்திய சாலை மறியல் போராட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


மூங்கில்துறைப்பட்டு

வடகீரனூர் ஊராட்சி

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட கீரனூரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 
இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் குடிநீர் கிணறுகளில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு பின்னர் குழாய் மூலம் பொதுமக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வினியோகம் செய்து வருகிறது. 

சாலை மறியல்

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக இப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலிகுடங்களுடன் வடகீரனூர் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 
இதனால் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தெரிவித்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் கள்ளக்குறிச்சி-திருவண்ணாமலை சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story