தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


தூத்துக்குடி  ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 23 April 2021 9:38 PM IST (Updated: 23 April 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் தயாரிக்க திறப்பதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி:
ஆக்சிஜன் தயாரிப்பதற்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்சிஜன் உற்பத்தி
கொரோனா பரவல் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அதிகளவில் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாட்டில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கடந்த 2018-ம் ஆண்டு பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது. அந்த ஆலை வளாகத்தில் தினமும் 1,050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலை உள்ளது. இதனை இயக்கி ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றபோது, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கருத்து கேட்பு கூட்டம்
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம், தமிழக அரசு சார்பில், தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் நேற்று காலை 8 மணி அளவில் அவசரமாக நடத்தப்பட்டது. இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தர்ணா போராட்டம்
இந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள், அரசு அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 28 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. எனினும் அழைப்பு விடுக்கப்படாதவர்கள் சிலரும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் கருத்துகேட்பு கூட்டத்தில் அனுமதித்தனர். கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியதும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர். சிலர் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை கலெக்டர் சமாதானப்படுத்தினார்.
கூட்டத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் பேசியதாவது:-
திறக்க அனுமதிக்காது
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஆலையை திறக்க அரசு அனுமதிக்காது. இந்த கருத்துக்களை பெற்று உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிலையில் இந்த கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆவேசமாக பேசினர்.
அப்போது அவர்கள் பேசியதாவது:-
மாற்று வழியில் திறக்க...
ஸ்டெர்லைட் ஆலையால் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்து தருகிறேன் என்று கூறி, மாற்று வழியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்யும் ஆக்சிஜனால் நாங்கள் வாழவேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக சிலர் பேச முயன்றனர். இதற்கு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஆதரவாக பேச முயன்றவர்களை போலீசார் பாதுகாப்பாக வெளியே அழைத்து சென்று விட்டனர்.
கல்வீச்சு
இதற்கிடையே, கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பெண்கள் உள்பட சிலர் வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தபோது, அங்கு திரண்டு நின்று கொண்டு இருந்த எதிர்ப்பாளர்கள், அவர்களை விரட்டி அடித்தனர். மேலும், அவர்கள் மீது கற்கள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில் ஒரு பெண் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் பாதுகாப்பாக ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பொதுமக்கள் சார்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், கலெக்டர் செந்தில்ராஜிடம் ஒரு மனு வழங்கினர்.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசே நடத்த...
தமிழக அரசால் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு உள்ளது. தற்போது கொரோனாவை காரணம் காட்டி ஆக்சிஜன் தயாரிப்புக்கு உச்சநீதிமன்றம் மூலம் அனுமதி கோரி உள்ளதால், கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் கருத்தாக ஆக்சிஜன் தயாரிப்பு என்ற போலி வடிவத்தில், குறுக்கு வழியில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு ஆலை நிர்வாகத்தின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அதற்கு அனுமதி அளிக்க கூடாது.
ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலும் பிரித்து அகற்றிவிட்டு அரசு நிலத்தை கையகப்படுத்தி அந்த நிலத்தில் தமிழக அரசு நேரடியாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனத்தை நிறுவி நடத்துவதில் பொதுமக்கள் ரீதியாக எந்தவித ஆட்சேபனையும் இல்லை. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் பொதுமக்கள் ரீதியாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்து கேட்பு கூட்டம் முடிந்த பிறகும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு இருந்தனர். சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பிறகே அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story