பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி


பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 23 April 2021 11:19 PM IST (Updated: 23 April 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் சாக்கடை கால்வாயில் பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் ஈடுபட முயன்றனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே கோட்டூரில் சாக்கடை கால்வாயில் பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் ஈடுபட முயன்றனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர். 

சாக்கடை கால்வாய் 

பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையின் காரணமாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இதனால் கழிவுநீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பேரூராட்சி சார்பில் சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணி தொடங்கியது. அந்த கால்வாயில் பாலம் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

மறியலில் ஈடுபட முயற்சி 

இந்த நிலையில் அங்கு பாலம் கட்டாமல், தூர்வாரும் பணி மட்டும் நடந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்கு குவிந்தனர். பின்னர் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

பாலம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

சிறு பாலம்

எங்கள் குடியிருப்பு அருகே இந்த வாய்க்காலில் சாலை குறுக்கிடுகிறது. அதில் சிறிய அளவிலான குழாய் போட்டு அதன்மீது சாலை அமைத்து உள்ளனர். இதனால் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், சாக்கடை நீர் செல்லாமல் தேங்கி, குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. 

எனவே இதைத்தடுக்க அந்த இடத்தில் சிறிய பாலம் அமைக்க வேண்டும். அப்போதுதான் எவ்வித தடையும் இல்லாமல் கழிவுநீர் செல்லும். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story