கைதிகள் மோதலில் வாலிபர் சாவு: பாளையங்கோட்டை சிறையை உறவினர்கள் திடீர் முற்றுகை


கைதிகள் மோதலில் வாலிபர் சாவு: பாளையங்கோட்டை சிறையை உறவினர்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 24 April 2021 1:51 AM IST (Updated: 24 April 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து அவருடைய உறவினர்கள், கிராம மக்கள் நேற்று சிறையை திடீரென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை:
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்து மனோ (வயது 27) என்பவரை நேற்று முன்தினம் சக கைதிகள் அடித்துக் கொலை செய்தனர். இதனைக் கண்டித்து முத்து மனோவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் வாகைகுளம் கிராம மக்கள் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களுக்கு ஆதரவாக தமிழர் விடுதலை களம் கட்சி தலைவர் வக்கீல் ராஜ்குமார், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் முத்து வளவன், தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால் பாளையங்கோட்டை- திருவனந்தபுரம் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக வந்த வாகனங்களை போலீசார் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறை முன்பு பதற்றம் நிலவியதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (நெல்ைல), சுகுணாசிங் (தென்காசி), நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் மகேஷ்குமார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை சிறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். சிறையில் முத்து மனோ கொலைக்கு காரணமான சிறை காவலர்கள், சூப்பிரண்டு, போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் கலைந்து செல்லாமல் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பஸ் போக்குவரத்து திருப்பி விடப்பட்ட குலவணிகர்புரம் சாலையில் இளைஞர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி, சிறை முன்பு அழைத்து வந்தனர்.

இதையடுத்து மாலையில் கலெக்டர் விஷ்ணு பாளையங்கோட்டை சிறை வளாகத்துக்கு வந்தார். அவருடன் நெல்லை உதவி கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் அதிகாரிகளும் வந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முத்து மனோவின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், வக்கீல்கள் ஆகியோருடன் கலெக்டர் விஷ்ணு நேரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை கலெக்டரிடம் எடுத்து கூறினர். அவற்றை கேட்டுக்கொண்ட கலெக்டர், கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பாளையங்கோட்டை சிறை முற்றுகை போராட்டம் காலையில் இருந்து மாலை வரை தொடர்ந்து நடைபெற்றதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story