சுண்ணாம்புக்கல் குவாரியில் வீசப்பட்ட இரட்டை சிசுக்கள் புதைப்பு


சுண்ணாம்புக்கல் குவாரியில் வீசப்பட்ட இரட்டை சிசுக்கள் புதைப்பு
x
தினத்தந்தி 24 April 2021 2:59 AM IST (Updated: 24 April 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே சுண்ணாம்புக்கல் குவாரியில் வீசப்பட்டு புதைக்கப்பட்ட இரட்டை சிசுக்களின் உடல்களை போலீசார் தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்துறை:

இரட்டை சிசுக்கள்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆதனக்குறிச்சி கிராமத்தில் தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்புக்கல் குவாரி உள்ளது. இப்பகுதிக்கு நேற்று சிலர் ஆடு மேய்க்க சென்றனர். அப்போது அங்கு, குறை பிரசவத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் என இரட்டை சிசுக்கள் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சிலர் அந்த சிசுக்களை அதே இடத்தில் குழிதோண்டி புதைத்து, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர்.
தோண்டி எடுப்பு
இது குறித்து தகவல் அறித்த தளவாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி ராயர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து செந்துறை தாசில்தார் குமரய்யா, வட்டார மருத்துவ அலுவலர் ரேவதி மற்றும் போலீசார் முன்னிலையில், புதைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. அவை சுமார் 8 மாதங்கள் வளர்ச்சி அடைந்தவையாக இருக்கலாம் என்று அதிகாரிகளால் கருதப்பட்டது.
கள்ளக்காதல் காரணமாக...
இதையடுத்து சிசுக்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவை தடயவியல் ஆய்வுக்கான தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
ேமலும் இரட்டை சிசுக்களின் உடல்களை மனிதாபிமானமின்றி ரகசியமாக அப்பகுதியில் வீசிச்சென்ற பெண் யார்? கள்ளக்காதல் காரணமாக உருவான சிசுக்களை கருக்கலைப்பு செய்து வீசிச்சென்றார்களா? என்ற கோணத்திலும், சிசுக்களை புதைத்தவர்கள் யார்? என்பது குறித்தும் தளவாய் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை சிசுக்களின் உடல்கள் குவாரி பகுதியில் வீசப்பட்ட சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story