ஆலங்குளம் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் சாவு
ஆலங்குளம் பகுதியில் வெவ்வேறு விபத்துகளில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
ஆலங்குளம்:
நெல்லை சிந்துபூந்துறையை சேர்ந்தவர் தமிழ்மன்னன் மகன் முகிலன் துரைநேசன் (வயது 23). டி.வி. மெக்கானிக். இவருக்கு திருமணம் முடிந்து 4 மாதம் ஆகிறது. இவருடைய நண்பரான அதே பகுதியை சேர்ந்தவர் செல்வன் மகன் சிவநேசபெருமாள் (22). நேற்று மதியம் முகிலன் துரைநேசன், தனது நண்பர் சிவநேசபெருமாளை அழைத்துக்கொண்டு பாவூர்சத்திரத்தில் ஒரு வீட்டில் பழுதான டி.வி.யை வாங்க மோட்டார்சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
ஆலங்குளத்தை அடுத்த புதூர் பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரியும், அவர்களது மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.
இதில் முகிலன் துரைநேசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவநேச பெருமாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்தும் சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முகிலன் துரைநேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த சிவநேசபெருமாள் சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளத்தை சேர்ந்தவர் பரமசிவன். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (52). இவர்கள் இருவரும் தங்களது 3-வது மகள் திருமணத்திற்கு முகூர்த்த தேதி நிச்சயிப்பதற்காக முக்கூடல் அருகே உள்ள அரசன்குளத்திற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மருதம்புத்தூர் அருகே சென்றபோது பின்னால் இருந்த சுப்புலட்சுமி நிலைதடுமாறி மொபட்டில் இருந்து சாலையில் விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுப்புலட்சுமியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊத்துமலை அருகே உள்ள சோலைச்சேரி மொட்டையன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (55). இவர் மரியதாய்புரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது முருகனின் பக்கத்து ஊரான ரதமுடையார்புரத்தை சேர்ந்த சின்னத்தம்பி (60) என்பவர் தன்னை தனது ஊரில் இறக்கி விடுமாறு கேட்டுள்ளார். அதன்பேரில் இருவரும் மோட்டார்சைக்கிளில் தங்களது ஊருக்கு வந்துகொண்டிருந்தனர். வாடியூர் விலக்கு அருகே வந்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி இருவரும் சாலையோரம் விழுந்தனர். இதில் சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த ஊத்துமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னத்தம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த முருகனை மீட்டு சிகிச்சைக்காக சுரண்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story