சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு குவிந்த பொதுமக்கள்
கொரோனா தடுப்பூசி போடுவதற்கு குவிந்த பொதுமக்கள்
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் குவிந்தனர்.
தடுப்பூசி
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணையாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 364 பேருக்கும், 2-ம் தவணையாக 46 ஆயிரத்து 283 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல், கோவேக்சின் தடுப்பூசி முதல் தவணையாக 34 ஆயிரத்து 918 பேருக்கும், 2-ம் தவணையாக 2 ஆயிரத்து 163 பேருக்கும் போடப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டத்தில் போதுமான அளவில் கொரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது என்றும், இதனால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் குவிந்தனர்
இந்த நிலையில், சேலம் குமாரசாமிப்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசி இருப்பு இல்லாத காரணத்தால் 200 பேருக்கு மட்டும் டோக்கன் வினியோகம் செய்து தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதையடுத்து பொதுமக்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டு வீடுகளுக்கு திரும்பி சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மற்றவர்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ஆஸ்பத்திரி ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
இதேபோல், சேலம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தாதகாப்பட்டி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மருந்து குறைவாக இருப்பு உள்ளதால் முதலில் வந்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. எனவே, கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்றும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story