கென்யா நாட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கடத்திய ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் என்ஜினீயர் கைது


கென்யா நாட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கடத்திய ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் என்ஜினீயர் கைது
x
தினத்தந்தி 24 April 2021 10:31 AM IST (Updated: 24 April 2021 10:31 AM IST)
t-max-icont-min-icon

கென்யா நாட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்புள்ள 46 கிலோ 800 கிராம் உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக என்ஜினீயரை கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கக பிரிவுக்கு கென்யா நாட்டில் இருந்து சரக்கு விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் போதை பொருள் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள், கென்யாவில் இருந்து வந்த பொருட்களை பரிசோதித்து அனுப்பினர்.

அப்போது கென்யா நாட்டு தலைநகா் நைரோபியில் இருந்து சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு 5 பெரிய பார்சல்கள் வந்து இருந்தன. அந்த பார்சல்களுக்குள் பூ ஜாடிகள், அலங்கார பூக்கள், ஏலக்காய், கிராம்பு போன்றவைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த பார்சல்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பார்சலில் இருந்த செல்போன் எண்ணை தொடா்பு கொண்டனா். அதில் பேசியவா், “பார்சல்கள் எனக்கு வந்தவைகள்தான். நான் அது சம்பந்தமாக தற்போது விசாரணைக்கு வரமுடியாது. நான் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயா். தற்போது பிரபலமான ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். பார்சலில் சந்தேகம் இருந்தால் நீங்களே பிரித்து பார்த்துவிட்டு எனக்கு டெலிவரி செய்யுங்கள்” என்று கூறிவிட்டார்.

இதனால் சற்று குழப்பமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சல்களை பிரித்து சோதனை செய்தனா். அதில் பார்சல்களில் இருந்த பூ ஜாடிகளுக்குள் விலை உயா்ந்த உயா்ரக கஞ்சா பொடிகள், பதப்படுத்தப்பட்ட கஞ்சா இலைகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 46 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவற்றின் சா்வதேச மதிப்பு ரூ.1 கோடியே 17 லட்சம் ஆகும்.

இதையடுத்து கென்யாவில் இருந்து சென்னைக்கு போதைப்பொருட்கள் கடத்தி கொண்டு வரப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக என்ஜினீயரை கைது செய்ய தனிப்படை அதிகாரிகள், பார்சலில் குறிப்பிட்டு இருந்த முகவரிக்கு சென்றனா். ஆனால் பார்சலில் இருந்த முகவரியில் அப்படி ஒரு நபா் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து தொடா்ந்து அப்பகுதிகளில் விசாரணை செய்தனா்.

அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்தபோது அங்கிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த சுமார் 27 வயது என்ஜினீயரை கைது செய்து சென்னை விமான நிலைய சுங்க இலாகா அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். அவரிடம் தொடா்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனா்.

இவா் ஏற்கனவே இதேபோல் சிலமுறை கஞ்சா போதை பொருளை பார்சலில் வரவழைத்து அதை தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் உள்ள இளைஞா்கள் பலருக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. அதுபற்றியும் தீவிர விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் சென்னை விமான நிலைய பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story