சிகிச்சை அளிப்பதில் சிரமம் லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளலாம் மாநகராட்சி கமிஷனர் தகவல்
லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், வீடுகளிலேயே பாதுகாப்பான முறையில் தனிமைப்படுத்தி கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கலில் உள்ள தேசிய திறன் பயிற்சி நிறுவனத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கான முதற்கட்ட உடற்பரிசோதனை மற்றும் கண்காணிப்பு மையத்தை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா 2-வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதம் மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொற்று பாதிக்கப்பட்ட மக்களில் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டாம். அறிகுறிகள் இல்லாமல் லேசான பாதிப்புடன் இருந்தால் வீட்டிலேயே பாதுகாப்பான முறையில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மாநகராட்சி அல்லது சுகாதார துறையை அணுகலாம்.
அறிகுறி சாதாரணமாக உள்ளவர்களும் ஒரே நேரத்தில் ஆஸ்பத்திரியில் குவிந்து விடுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் டாக்டர்களால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கூட்டநெரிசலை தவிர்க்க தீவிர அறிகுறி இருந்தால் மட்டும் அரசு ஆஸ்பத்திரியை அணுகலாம்.
சாதாரண அறிகுறியுடன் உள்ளவர்கள் மாநகராட்சி பரிசோதனை மையங்களுக்கு வந்தால் டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப அவர்களை வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமா? அல்லது மாநகராட்சி பாதுகாப்பு மையம் அல்லது ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டுமா? என பிரித்து அனுப்பி வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story