10 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்: ‘கொரோனா தொற்று இல்லாத முகவர்களே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்’ - மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உறுதி


10 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்: ‘கொரோனா தொற்று இல்லாத முகவர்களே வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர்’ - மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உறுதி
x
தினத்தந்தி 24 April 2021 4:10 PM IST (Updated: 24 April 2021 4:10 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் ‘கொரோனா தொற்று இல்லாத முகவர்களே அனுமதிக்கப்படுவர்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது.,

தமிழகம் முழுவதும் சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகின்ற 2-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை 2-ந் தேதி காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்குகிறது. அதன்படி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டு ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளி வளாகத்திலும், திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையம் பெருமாள்பட்டு ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திலும், மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையம் பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

அதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை காலை 8 மணிக்கு வேட்பாளர்கள் முன்னிலையில் திறக்கப்படும். மேற்படி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு வேட்பாளரும் தங்களால் நியமிக்கப்பட்ட முகவர்களுடன் 7 மணிக்கு முன்பாக ஆஜராக வேண்டும்.

அதையொட்டி, முகவர்களுக்கு வருகிற 27 மற்றும் 28 ஆகிய இரு நாட்களில் கொரோனா தொடர்பான பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்படும். மேற்படி பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லாத முகர்வர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் முகவர்கள் செல்போன், கேமரா, லேப-்டாப் போன்றவற்றை கொண்டு வர அனுமதி இல்லை. வாக்குப்பதிவு எந்திரத்தில் எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்றுக்கு பிறகும் முகவர்களுக்கு அளித்து ஒப்புதல் பெறப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எண்ணிக்கை முடிவுற்ற பிறகு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வி.வி.பேட் எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு எந்திரங்களில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மேஜைக்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, பயிற்சி உதவி கலெக்டர் அனமிகா ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி மற்றும் 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story