அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா
அடிப்படை வசதிகளை செய்து தராததை கண்டித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு கீழானூர் ஊராட்சிக்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கையில் காலி குடங்களுடன் நேற்று திடீரென முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, கீழானூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிட்டத்தூர், கீழானூர், நாசரேத் போன்ற பகுதிகளில் தண்ணீர் வசதி இல்லாமல் 20 ஆண்டுகளாக தாங்கள் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் சுடுகாட்டிற்கு மதில் சுவர் மற்றும் எரிமேடை வசதி செய்து தரப்படவில்லை. குடிநீர், மின் விளக்குகள் வசதிகள், பஸ் வசதி , நிழற்குடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர். இதைக்கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும், திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து அனைவரும் கீழானூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் உஷாபிரேம்சேகர் தலைமையில் 10 பேர் அது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் பா.பொன்னையாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story