பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 24 April 2021 6:10 PM IST (Updated: 24 April 2021 6:10 PM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் ஐகோா்ட்டு உத்தரவுபடி பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகளை போலீசாரும், வருவாய்த் துறையினரும் சமரசம் செய்தனர்.

ஆரணி

ஆரணியில் ஐகோா்ட்டு உத்தரவுபடி பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகளை போலீசாரும், வருவாய்த் துறையினரும் சமரசம் செய்தனர்.

ஆக்கிமிப்பு கடைகள்

ஆரணி காந்தி ரோட்டில் அண்ணா சிலை அருகில் அங்காள பரமேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. கோவிலை, ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர். கோவில் நிர்வாகிகள், கோவிலின் வெளிப்பகுதியிலும், சுற்றுப் பகுதியிலும் ஆக்கிரமித்து, கடைகளை கட்டி வியாபாரம் செய்து வந்தனர்.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணை நடந்தபோது, ஐகோர்ட்டு 2017-ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி சர்க்கார் புறம்போக்கு இடத்தை அளந்து எடுக்க வேண்டும், என உத்தரவிட்டது.

பொக்லைன் எந்திரத்துடன் 

அதைத்தொடர்ந்து தாசில்தார்கள் சரிவர நடவடிக்கை எடுக்காததால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. தற்போது ஐகோர்ட்டு, திங்கட்கிழமைக்குள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, அதற்கான புகைப்படத்துடன் வரவேண்டும், என தாசில்தாருக்கு உத்தரவிட்டது. 

அதன்படி இன்று காலை பொக்லைன் எந்திரத்துடன் ஆரணி தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் வருவாய் ஆய்வாளர் வேல்மணி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், சிவகுமார் நகராட்சி வரைபடவாளர் பாலாஜி ஆகியோர் கோவில் அருகில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்தனர். அவர்களுடன் பாதுகாப்பு பணிக்காக ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசாரும் வந்தனர். 

வாக்கு வாதம்

ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றச் சென்றபோது, கடை நடத்திய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கிருந்த போலீசார், ஐகோர்ட்டு உத்தரவுபடி ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட உள்ளது. எனவே கடையில் உள்ள பொருட்களை எடுத்துச் செல்லுங்கள் என வியாபாரிகளிடம் கூறினர். 

ஆனால் வியாபாரிகள் ஏற்காததால் சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் சமரசம் ஏற்பட்டதும் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியை தொடங்கினர். இதனால் ஆரணி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story