ஊட்டியில் பலத்த மழை


ஊட்டியில் பலத்த மழை
x
தினத்தந்தி 24 April 2021 8:08 PM IST (Updated: 24 April 2021 8:16 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் பெய்த பலத்த மழையால் 5 ஏக்கர் விளைநிலங்களில் பயிர்கள் சேதம் அடைந்தன.

ஊட்டி, 

நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஊட்டி அருகே உள்ள சின்ன குன்னூர் பெந்தட்டி கிராமத்தில் விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த கேரட், பீட்ரூட், பூண்டு ஆகிய பயிர்கள் அடித்து செல்லப்பட்டு, சேதமடைந்தது. மேலும் விதைகள் விதைத்து இருந்த நிலத்தில் மழைநீர் புகுந்ததால் சேறும், சகதியுமாக மாறியது. 

இது மட்டுமின்றி விளைநிலங்களில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சிறிய குழாய்கள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் ஸ்பிரிங்ளர்கள் பொருத்தப்பட்டு இருந்தன. வெள்ளம் புகுந்ததால் அந்த குழாய்கள் சேதம் அடைந்தது. இதை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 5 ஏக்கருக்கும் மேலான விளைநிலங்களில் பயிர்கள் சேதம் அடைந்தன.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கேரட் அறுவடை முடித்து பூண்டு, பீட்ரூட் ஆகியவற்றை பயிரிட்டோம். அவை இரவில் பெய்த மழையால் சேதம் அடைந்து உள்ளது. இதனால் மீண்டும் விதைகள் வாங்கி நடவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே எங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஊட்டி-3, நடுவட்டம்-40, கல்லட்டி-29, மசினகுடி-16.5, உலிக்கல்-6, கோடநாடு-39. மொத்தம் மாவட்டம் முழுவதும் 154.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 5.40 மில்லி மீட்டர் ஆகும்.


Next Story