கொடைக்கானலில் சாலைகளில் உலா வந்த காட்டெருமைகள்


கொடைக்கானலில் சாலைகளில் உலா வந்த காட்டெருமைகள்
x
தினத்தந்தி 24 April 2021 8:15 PM IST (Updated: 24 April 2021 8:15 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் வனப்பகுதியில் இருந்து நகருக்குள் நுழைந்த காட்டெருமைகள் சாலைகளில் கூட்டமாக உலா வந்தன.

கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டெருமைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் தேடி காட்டெருமைகள் அடிக்கடி நகர் பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. இதற்கிடையே நேற்று கொடைக்கானலில் வாரச்சந்தை நடைபெற்றது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாடினர். 
இந்தநிலையில் நண்பகல் 11 மணி அளவில் கொடைக்கானல் 7 ரோடு சந்திப்பு மற்றும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை ஆகிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் கூட்டமாக உலா வந்தன. இதனை பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். அப்போது அவர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு, காட்டெருமைகள் செல்ல வழிவிட்டனர். 
சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக சாலைகளில் உலா வந்த காட்டெருமைகள், பின்னர் தனியார் தோட்ட பகுதிக்குள் சென்றன. இதையடுத்து பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தால் கொடைக்கானலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story