வேதாரண்யம் பகுதியில் மாங்காய் விலை வீழ்ச்சி
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் வேதாரண்யம் பகுதியில் மாங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வியாபாரிகள் வாங்க வராததால் வேதாரண்யம் பகுதியில் மாங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாங்காய் சாகுபடி
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கத்தரிப்புலம், பெரியகுத்தகை, புஷ்பவனம், தேத்தாகுடி, செம்போடை, நாலுவேதபதி, தாமரைபுலம், குரவப்புலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ருமேனியா, செந்தூரா, பங்கனப்பள்ளி, ஒட்டு, நீலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். பனிப்பொழிவு மற்றும் பூச்சி தாக்குதலால் மாங்காய் விளைச்சல் குறைந்துள்ளது.
விலை வீழ்ச்சி
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக மாங்காய் வாங்க வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.50-க்கு மேல் விற்ற மாங்காய் தற்போது ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் காரணமாக மாமரங்கள் முறிந்த நிலையில் தற்போது துளிர்விட்டு பூத்து காய்த்து வருகிறது.
இழப்பீடு
இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் மாங்காய் வாங்க வருவதில்லை. வியாபாரிகள் வராததால் மாங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் சாகுபடிக்கு செலவு செய்த பணம் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கஜா புயல் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவற்றால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் மா விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story