ஆதரவற்ற முதியவருக்கு உணவளித்த திண்டுக்கல் சப்-இன்ஸ்பெக்டர்
திண்டுக்கல்லில் இரவுநேர ஊரடங்கு காரணமாக உணவு கிடைக்காமல் பசியால் வாடிய ஆதரவற்ற முதியவருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உணவளித்தார்.
திண்டுக்கல்:
இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால் திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஓட்டல், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டுவிடும். பொதுமக்களும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. நகரின் முக்கிய சாலைகளில் போலீசாரும் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு தடையை மீறி யாரேனும் வெளியே சுற்றித்திரிகின்றனரா? என்று கண்காணித்து வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு நகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது நாகல்நகர் ரவுண்டானா அருகே ஆதரவற்ற முதியவர் ஒருவர் கண்ணீருடன் சாலையோரத்தில் அமர்ந்திருப்பதை சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தார். உடனே அங்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் முதியவரிடம் விசாரித்தார். அப்போது அவர் உணவு வாங்க காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதற்குள் ஓட்டல்களும் அடைக்கப்பட்டுவிட்டன. எனவே உணவு கிடைக்காமல் பசியால் அவதிப்படுகிறேன் என்றார். இதையடுத்து தான் சாப்பிடுவதற்காக வாங்கி வைத்திருந்த உணவை அந்த முதியவருக்கு சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்து சாப்பிட வைத்தார். சப்-இன்ஸ்பெக்டரின் இந்த செயல், அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
Related Tags :
Next Story