சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
புதுச்சத்திரத்தில் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய ரவுடி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சிவகுருநாதன். இவர் சம்பவத்தன்று புதுச்சத்திரம் அருகே உள்ள சீனிவாசபுரம் குறுக்கு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த மோட்டார் சைக்கிளை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் வழிமறித்தார். உடனே மோட்டார் சைக்கிளில் வந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, ஆபாசமாக திட்டி, தாக்கி அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சக போலீசார் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தார். விசாரணையில் அவர் ஆலப்பாக்கம் குறவன்மேடு பகுதியை சேர்ந்த ராமதாஸ் மகன் நிரபு (வயது 31) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
கைதான நிரபு மீது, புதுச்சத்திரம், திருப்பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், சீர்காழி, மாயவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 15 வழக்குகள் உள்ளன. மேலும் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் அவர் மீது ரவுடி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அவரது தொடர் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, நிரபுவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, ரவுடியான நிரபுவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபுவிடம், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story