கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்


கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய மதுபிரியர்கள்
x
தினத்தந்தி 24 April 2021 10:04 PM IST (Updated: 24 April 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

கடலூர், 

தமிழகத்தில் தற்போது தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியது. கடந்த 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இந்த முழு ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள், இறைச்சி, மீன், காய்கறி மற்றும் அனைத்து கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் ஆகியவை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அவசர மருத்துவ சேவைகள், பால் வினியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி சேவை, சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஓட்டல்களில் பார்சல் சேவை உள்ளிட்ட சிலவற்றுக்கு மட்டும் தளர்வு செய்யப்பட்டுள்ளது.

மதுபிரியர்கள் கூட்டம்

அதன்படி கடலூர் மாவட்டத்திலும் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் காய்கறி மற்றும் இறைச்சி கடைகளில் நேற்று இல்லத்தரசிகள் கூட்டம் அலைமோதியது போல், மதுபான வகைகளை வாங்க டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்கள் குவிந்தனர்.
அவர்கள் கூட்டம், கூட்டமாக டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்து சென்றனர். வழக்கம்போல் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை விற்பனையாளர்கள் திறந்தனர். உடனே மதுபிரியர்கள் போட்டிபோட்டு மதுபாட்டில்களை வாங்கினர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. பலர் 2 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.

Next Story