விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு முகாம்கள் நடத்தி கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு


விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு முகாம்கள் நடத்தி கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் கலெக்டர் அண்ணாதுரை உத்தரவு
x
தினத்தந்தி 24 April 2021 10:08 PM IST (Updated: 24 April 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு முகாம்கள் நடத்தி கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம்,


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் பொருட்டு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். நோய் தொற்று கண்டறியப்படும் நபர்களை உடனடியாக தனிமைப்படுத்தப்படும் சிகிச்சை மையங்களில் அனுமதிக்க வேண்டும். ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அப்பகுதியை தடுப்புக்கட்டைகள் மூலம் தனிமைப்படுத்தி அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்

கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கூடுதல் கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க வேண்டும். தொற்றால் பாதிப்படைந்தவரின் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள அனைத்து வீடுகளிலும் தவறாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதோடு அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட வேண்டும்.

நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பொருட்கள் வாங்கிச்செல்வதையும், கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் சமூக இடைவெளியினை பின்பற்றி கட்டாயம் முகக்கவசம் அணிந்து பொருட்கள் விற்பனை செய்வதையும், பொது இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் போலீசார் உறுதி செய்திட வேண்டும்.

முகாம்கள்

மேலும் சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கள் பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மையினை தெளிவாக எடுத்துக்கூறி தடுப்பூசியினை செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். 

அதே நேரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முகாம்கள் ஏற்படுத்தி கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்திட வேண்டும்.

தற்போது போடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளை முழுமையாக பொதுமக்கள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நோய் தடுப்பு நடவடிக்கையில் அனைத்துத்துறை அலுவலர்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

 இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ராதாகிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், சுகாதார பணிகள் இணை இயக்குனர் சண்முகக்கனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், விழுப்புரம் நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story